இந்தப் பிரபஞ்சம் 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பெருவெடிப்பில் பிறந்தது. அதற்கு முன்னர் முழுப்பிரபஞ்சமும் ஒரு மிகச் சிறிய குமிழியினுள் இருந்தது, அது ஊசி முனையைவிட பல பில்லியன் மடங்கு சிறிதாக இருந்தது. திடீரென பெருவெடிப்பில் இந்தப் பிரபஞ்சம் உயிர்ப்பெற்றது.
ஒரு செக்கனுக்கும் குறைவான நேரத்தில், ஒரு தலைமுடியின் அளவைவிட சிறிதாக இருந்த பிரபஞ்சம், விண்மீன் பேரடையைவிடப் பெரிதாகியது. மேலும் அது தொடர்ந்து விரிவடைந்துகொண்டே சென்றது. உண்மையைக் கூறவேண்டும் என்றால், பிரபஞ்சம் இன்றும் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அது மேலும் மேலும் பெரிதாகிக்கொண்டே செல்கிறது.
நமக்கு மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகள் வழமைக்கு மாறாக சிவப்பாக இருப்பதை பல வருடங்களுக்கு முன்னர் எட்வின் ஹபிள் அவதானித்தார். இன்று நாம் இதை சிவப்பு மாற்றம் (redshift) என்று அழைக்கின்றோம். இவற்றின் ஒளி சிவப்பாகத் தெரிவதற்குக் காரணம், அவை எம்மைவிட்டு வேகமாக தொலைவை நோக்கி விரைந்து செல்வதனாலாகும். மேலும், எமக்கு மிகத்தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகள், அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகள் எம்மைவிட்டு விலகிச்செல்லும் வேகத்தைவிட மிக வேகமாக எம்மைவிட்டு விலகிச் செல்கின்றன.
ஹபிள் பயன்படுத்திய உத்தியைப் போலவே, ஹபிள் விண்-தொலைநோக்கியைப் (ஹபிளின் ஞாபகார்த்தமாக அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது) பயன்படுத்தி விண்ணியலாளர்கள், இதுவரை கண்டறிந்ததிலேயே மிக மிகத் தொலைவில் இருக்கும் ஒரு விண்மீன் பேரடையின் தூரத்தை அளந்துள்ளனர்.
இந்தப் புதிதாகக் கண்டறியப்பட்ட விண்மீன் பேரடை, 13 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளது. ஏற்கனவே கண்டறியப்பட்ட மிகத்தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடையைவிட 150 மில்லியன் ஒளியாண்டுகள் அதிக தொலைவில் உள்ளது இந்த விண்மீன் பேரடை. இந்த விண்மீன் பேரடையில் இருந்து வெளிவந்து தற்போது எம்மை வந்து சேர்ந்துள்ள ஒளியானது, பிரபஞ்சம் வெறும் 400 மில்லியன் வருடங்கள் வயதாகியிருந்தபோது இந்த விண்மீன் பேரடையில் இருந்து புறப்பட்டது – இது அண்ணளவாக இந்தப் பிரபஞ்சத்தில் முதல் விண்மீன்கள் தோன்றிய காலமாகும்!
ஆர்வக்குறிப்பு
இந்த மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடையானது, நமது பால்வீதியுடன் ஒப்பிடும் போது மிகச் சிறியது. ஆனால், பால்வீதியில் உருவாகும் விண்மீன்களைவிட 20 மடங்கு அதிகளவான விண்மீன்கள் அங்கு உருவாகின்றன.
இந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Hubble Space Telescope.
Share: